‘நூடுல்ஸ்’ விமர்சனம்

990

நடிகர்கள் : ஹரிஷ், மதன் தக்‌ஷிணாமூர்த்தி, ஷீலா ராஜ்குமார், ஆழியா, திருநாவுக்கரசு, ஹரிதா, மஹினா, வசந்த் மாரிமுத்து, சோபன் மில்லர்
இசை : ராபர்ட் சற்குணம்
ஒளிப்பதிவு : டி.வினோத் ராஜா
இயக்கம் : மதன் தக்‌ஷிணாமூர்த்தி
தயாரிப்பு : ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் – பிரகன் அருண்பிரகாஷ்

கணவன், மனைவியான ஹரிஷ், ஷீலா ராஜ்குமார் தங்களது மகள் மற்றும் தங்கள் வீட்டு அருகே குடியிருப்பவர்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து இரவு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போடும் சத்தத்தை கேட்டு அந்த வழியாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள், அவர்களை கண்டிக்க அதற்கு அவர்கள் பதிலுக்கு பதில் பேசுவதால் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால், போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறார்.

இந்த சம்பவம் முடிந்து மறுநாள், திருமணமாகி 10 வருடங்களாக மகளை பார்க்காத ஷீலா ராஜ்குமாரின் பெற்றோர் அவரை பார்க்க வரும் தகவல் ஹரிஷுக்கு தெரிய வருகிறது. அவர் தனது மனைவிக்கு தெரியாமல் அவர்களை வரவேற்பதற்கான பணிகளை செய்வதோடு, மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஷீலா ராஜ்குமார் செய்த தவறால் ஒருவர் இறந்துவிட, இதனால் ஒட்டு மொத்த குடும்பமே பதறிப்போகிறது. இந்த பிரச்சனையில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைக்கும் ஹரிஷ், அதற்கான முயற்சிகளில் ஈடுபடும் போது, அவமானத்தோடு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஷை கைது செய்ய அவர் வீட்டுக்கு வருகிறார். போலீஸ் ஒரு பக்கம், இறந்தவரின் உடல் மறுபக்கம் என்று சிக்கி தவிக்கும் ஹரிஷ் மற்றும் அவரது குடும்பத்தார் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா? அல்லது போலீசிடம் வசமாக சிக்கினார்களா? என்பதை பரபரப்பாக சொல்வது தான் ‘நூடுல்ஸ்’.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். படம் தொடங்கி சில நிமிடங்களுக்குப் பிறகு பதற்றமான மனநிலையோடு இருக்க வேண்டும், அதே சமயம் அந்த பதற்றம் எதிர் இருக்கும் கதாபாத்திரத்திற்கு தெரியக்கூடாது, ஆனால் படம் பார்க்கும் பார்வையாளர்கள் உணர வேண்டும், என்ற மிகப்பெரிய சவாலை மிக சிறப்பாக செய்திருக்கும் ஹரிஷ், தன் நடிப்பு மூலம் பார்வையாளர்களையும் படம் முடியும் வரை பதற்றத்துடனே வைத்திருக்கிறார்.

தொடர்ந்து அழுத்தமான வேடங்களில் நடித்து வரும் ஷீலா ராஜ்குமார், இதிலும் அப்படிப்பட்ட வேடத்தில் வழக்கமான தனது அசத்தலான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஹரிஷின் மனைவியாக நடித்திருக்கும் அவரது ஒவ்வொரு அசைவுமம் காட்சிகளை கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறது.

ஹரியின் குடியிருப்புவாசி வேடத்தில் நடித்திருக்கும் திருநாவுக்கரசு, அவரது மனைவியாக நடித்திருக்கும் ஜெயந்தி, மஹினா, வழக்கறிஞராக நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து, போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் ஷோபன் மில்லர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது நடிப்பு மூலமாக திரைக்கதைக்கு கூடுதல் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்கள்.

வழக்கறிஞராக நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து, ஆரம்பத்தில் கெத்தாகவும், வேகமாகவும் பேசிவிட்டு பிறகு படபடப்பாக இருக்கும் காட்சிகள் அனைத்தும் திரையரங்கையே குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது. குழந்தை நட்சத்திரம் ஆழியா, சிறுவர்கள் என அனைவருமே மிக இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார்கள்.

கதை முழுவதும் ஒரு வீட்டுக்கள் அதிலும் சிறு அறைகளுக்குள் பயணித்தாலும் அந்த உணர்வே ஏற்படாத வகையில் நடிகர்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக ரசிகர்களிடம் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டி.வினோத் ராஜா. நடிகர்களின் ரியாக்‌ஷன்கள் தான் படத்தின் பலம் என்பதை மிக சரியாக புரிந்துக்கொண்டு காட்சிகளை படமாக்கிய விதம் படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை அளவு. பெரும்பாளான காட்சிகளில் பின்னணியில் இசை பயணிப்பதே கேட்காதவாறு பின்னணி இசையமை கொடுத்திருப்பது காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் சரத்குமாரின் பணியும், கலை இயக்குநர் ஆனந்தன் எட்வர்ட் கென்னடியின் பணியும் கவனிக்க வைக்கிறது.

’அருவி’, ‘அயலி’, ‘மாமன்னன்’, ‘மாவிரன்’ போன்ற படங்களில் தனது நடிப்பின் மூலம் பாராட்டு பெற்ற நடிகர் அருவி மதன், இதில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வழக்கம் போல் நடிப்பில் பாராட்டு பெற்றிருப்பதோடு, இயக்குநராக தனது முதல் படத்திலேயே திரையுலகினர் வியந்து போகும் விதத்திலும், ரசிகர்கள் அசந்து போகும் விதத்தில் ஒரு எளிமையான கதையை, மிக சுவாரஸ்யமான படமாக கொடுத்திருக்கிறார்.

அவுட்டோர் படப்பிடிப்பே இல்லை, படம் முழுவதும் ஒரு வீட்டுக்குள் மட்டுமே நடக்கிறது. ஹரிஷ், ஷீலா ராஜ்குமார், சிறுமி ஆழியா இவர்கள் மூன்று பேர் மட்டுமே முதல்பாதி முழுவதும் வந்தாலும், அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு படம் நகர்கிறது. இரண்டாம் பாதியில், மற்ற கதாபாத்திரங்கள் இணைந்த பிறகு, அழுத்தமான கதை நம்மை ஆசுவாசப்படுத்துவதோடு, ஆங்காங்க சிரிக்கவும் வைக்கிறது.

இறுதிக் காட்சி நெருங்க நெருங்க என்ன நடக்கப் போகிறது? என்ற பதற்றத்துடன் நம்மையும் சீட் நுனிக்கு நெருங்க வைக்கும் இயக்குநர், இறுதியில் திரையரங்கே ஆரவாரம் செய்யும் விதத்திலான க்ளைமாக்ஸோடு படத்தை கொண்டாட வைத்திருக்கிறார்.

ரேட்டிங் 4/5