தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், எழுத்தாளர், திரை ஆர்வலர் என பன்முக ஆளுமை கொண்ட செழியன், ‘ தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பெயரில் எதிர்கால திரையுலக படைப்பாளிகளுக்கான பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட 34 மாணவ படைப்பாளிகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் புதிய சரித்திரம் படைத்திடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தி ஃபிலிம் ஸ்கூல் செழியனுடன் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத்; ஒளிப்பதிவாளர்கள் பி. சி. ஸ்ரீ ராம், ரவிவர்மன்; வரைகலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருது; தயாரிப்பாளர்- விமர்சகர் தனஞ்ஜெயன்; இயக்குநர்கள் ஞானராஜசேகரன், ஹரிஹரன்; ஒலிப்பதிவு கலைஞர் தபஸ் நாயக்; திரைப்பட திறனாய்வாளர் மருத்துவர் தாயப்பன்; எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழ் பிரபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் திரு. செழியன் வரவேற்று பேசுகையில், ”வருகை தந்து சிறப்பித்திருக்கும் விருந்தினர்கள், நண்பர்கள், இலக்கிய ஆளுமைகள், என்னுடைய ஃபிலிம் ஸ்கூலில் படித்த மாணவர்கள் என அனைவரையும் வரவேற்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் உலக சினிமா என்ற புத்தகத்தை எழுதுவதற்கு முன் ஜெர்மானிய இயக்குநர் வெர்னர் ஹெர்சாக்கைப் பற்றி படித்தேன். அவர் ஒரு ஃபிலிம் ஸ்கூலில் படிக்கிறார். படித்து முடித்தவுடன் அவர் ஒரு கண்ணாடி கூண்டிற்கு முன் நிற்கிறார். அப்போது அவர் அதிலிருந்து ஒரு கேமராவை கொடுங்கள், நான் படம் எடுத்துவிட்டு தருகிறேன் என்கிறார். அது இன்ஸ்டியூட்டில் உள்ள கேமரா. அதனை கொடுக்க முடியாது என்கிறார்கள். அவர் அன்றிரவு அந்த கண்ணாடி கூண்டை உடைத்து ஒரு கேமராவை எடுத்து, படத்தை எடுத்த பின் மீண்டும் கேமராவை ஒப்படைக்கிறார். அதன் பிறகு அவரைப் பற்றிய நிறைய விஷயங்களை தேடத் தொடங்கினேன். அதன் பிறகு அவர் ரோக் ஃபிலிம் ஸ்கூலில் படித்தார் என்ற தகவலை உறுதியாக பிடித்துக் கொண்டேன். ரோக் என்றால் நாடோடி, கலகக்காரன், ஊர் சுற்றி இப்படி எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.
அதன் பிறகு அவர் படித்த ஸ்கூலில் சேர்வதற்கான விதிமுறைகளை ஆராய்ந்தேன். அந்த ஸ்கூலில் சேர வேண்டும் என்றால் 12 புத்தகங்கள் வாசித்திருக்கவேண்டும். எங்கு சென்றாலும் வாகனங்களில் செல்லாமல் நடைப்பயணமாகவே செல்ல வேண்டும். சென்ஸிபிலிட்டி இருக்க வேண்டும். ஒரு நான்கு வயது குழந்தைக்கு அரை மணி நேரம் கவனம் சிதறாமல் கதை ஒன்றை சொல்ல வேண்டும். இதெல்லாம் செய்ய முடியும் என்றால் எங்களுடைய பிலிம் ஸ்கூலில் சேர முடியும் என்கிறார். அவரிடம் பிலிம் ஸ்கூலின் முகவரியை கேட்கிறார்கள். அந்த முகவரி நான்தான் என்கிறார். ஒரு நாடோடியாக இருக்கிறார். நியூசிலாந்தில் இருக்கிறார் என்றால் அங்கு ஒரு பத்து நாள் வகுப்பு நடைபெறும். ஜெர்மனியில் இருக்கிறார் என்றால் அங்கு ஒரு பத்து நாள் வகுப்பு நடைபெறும்.
அதன் பிறகு ஈரானிய இயக்குநர் மக்மல்பாஃப்பை சென்னையில் சந்தித்தேன். அவருடன் மூன்று நாட்கள் உடனிருந்தேன். அவர் ஒரு ஃபிலிம் ஸ்கூலை நடத்திக் கொண்டிருந்தார். உங்களுடைய ஃபிலிம் ஸ்கூலுக்கான சிலபஸ், அட்மிஷன் ப்ரொசீஜர் என்ன என கேட்டேன். ஏதேனும் ஒரு கவிதை புத்தகத்தை ஒரு வாரம் வரை படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு ஓவியரை மட்டும் தெரிவு செய்து அவருடைய ஓவியப் படைப்புகளை தொடர்ந்து ஒரு மாதம் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகு ஒரு எழுத்தாளரின் சிறுகதைகளை ஒரு மாதம் வரை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும் .அதன் பிறகு தினமும் 50 கிலோ மீட்டர் வரை தூரம் வரை சைக்கிள் ஓட்ட வேண்டும் . ஒரு மணி நேரம் நீச்சல் அடிக்க வேண்டும். நான் உடனடியாக உங்களுடைய பிலிம் ஸ்கூலில் நான் சேர இயலுமா எனக் கேட்டேன். அதற்கு அவர், “அரசுக்கு எதிராக திரைப்படம் எடுக்கிறேன் என்று சொல்லி என்னை நாடு கடத்தி விட்டார்கள். நான் ரஷ்யாவில் இருக்கிறேன். ரஷ்யாவில் இருந்து தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கிறேன். நான்தான் அந்த ஃபிலிம்ஸ் ஸ்கூல்,சி என்றார். அதன் பிறகு அவர், “நான் ஒரு 15 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களை எல்லாம் ஓரிடத்தில் ஒன்றிணையுங்கள். சேர்ந்து சினிமாவை பற்றி பத்து நாள் பேசுவோம். பதினோராவது நாள் திரைப்படத்தின் பணிகளை தொடங்கி, 15 நாளில் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து விடுவோம்,” என்றார்.
இதுதான் என்னுடைய பிலிம் ஸ்கூலின் கான்செப்ட். இதனை பிரம்மாண்டமாகவோ, விழாவாகவோ, நிறுவனமாகவோ உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. தீவிர சினிமாவை பற்றி பேசும் நண்பர்கள், இலக்கியத்தைப் பற்றி தீவிரமாக பேசும் நண்பர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இயங்கும் அமைப்புதான் இது.
சென்னையில் எங்கேனும் 500 குடியிருப்புகள் உள்ள பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டால்… அதன் அருகே அரசு ஒரு பூங்காவை உருவாக்க வேண்டும். அதில் புல்வெளி இருக்க வேண்டும். மரங்கள் இருக்க வேண்டும். இது விதி. அதேபோல் சினிமா ஒரு மிகப்பெரிய இண்டஸ்ட்ரி.
செயற்கையான பிரம்மாண்டமான கட்டடங்கள் இருக்கும் போது இயற்கையான புல்வெளியும், மரங்களும் எப்படி இருக்க வேண்டுமோ, அதே போல் தான் இந்த பிலிம் ஸ்கூலின் சினிமா.
இப்பொழுது எல்லா நேரங்களிலும் ஏசியில் தான் இருக்கிறோம், இயங்குகிறோம். சிறிது நேரம் புல்வெளியிலும் காலாற நடக்க வேண்டும். மூன்று கோடி முதல் 300 கோடி வரை படம் எடுங்கள். அவை அனைத்தும் வெற்றி பெறட்டும். 20 லட்ச ரூபாய் முதலீட்டிலும் சில திரைப்படங்கள் உருவாகட்டும். இத்தகைய முயற்சிக்கு இங்குள்ள பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் வருடத்திற்கு 10 அல்லது 12 நாட்கள் ஒதுக்கீடு செய்து ஆதரித்தால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். கமர்ஷியல் சினிமாவும் வெற்றி பெறும், சிறிய பட்ஜெட் படங்களும் வெற்றி பெறும். இருவரும் இணைந்து வளர்வார்கள். இந்த துறையும் வளர வேண்டும். சினிமாவிற்கு ஆர்கானிக்கான ஒரு விசயமும் தேவை.
‘விதைத்துக்கொண்டே இருங்கள்’ என நம்மாழ்வார் அடிக்கடி குறிப்பிடுவார். அதனால் நாங்கள் விதைத்து கொண்டே இருக்கிறோம். அவர் விவசாயத்தில் செய்ய திட்டமிட்டது இயற்கை விவசாயம். நாங்கள் செய்யத்திட்டமிடுவதும் இயற்கையான சினிமா விவசாயம்,” என்றார்.
உலக சினிமா ஆய்வாளர் மருத்துவர் தாயப்பன் பேசுகையில், ”1950 களில் பிரான்ஸில் நியூ வேவ் அதாவது புதிய அலை என்ற இயக்கம் உருவாகிறது. எழுத்து, இசை, ஓவியம், அரசியல், திரைப்படம் என அனைத்திலும் ஏற்கனவே இருக்கக்கூடிய, சலித்து போன மரபுகளை உடைத்து விட்டு புதிய சிந்தனை பரவ வேண்டும் என்பதற்காக அந்த இயக்கம் தோன்றுகிறது. இதன் தாக்கம் திரைப்படத்திலும் ஏற்படுகிறது. மரபு சார்ந்த திரைப்படங்களை விமர்சித்து விமர்சித்து சலித்து போன விமர்சகர்கள் புதிய அலை குறித்து விவாதிக்கிறார்கள். பழக்கப்பட்ட திரைக்கதை, வழக்கமான கேமரா கோணங்கள், பழக்கப்பட்ட ஒளி/ ஒலி அமைப்பு என இருக்கும் மரபுகளை உடைத்து, எங்கும் நிற்காத கேமரா கோணங்கள், இயல்பான கதைகள், இளைஞர்களைப் பற்றிய கதைகள், இயற்கையான ஒளி/ ஒலி அமைப்பு இவற்றையெல்லாம் தங்களுக்குள் வரித்துக் கொண்டு படைப்பை உருவாக்குகிறார்கள்.
இந்த புதிய அலைக்கு அரசியலோடும் பிணைப்பு உள்ளது. முசோலினியின் வீழ்ச்சிக்கு பிறகு தான் ரியலிசம் தோன்றியது.
புதிய அலை என்பது ஒரு இயக்கமோ ஒரு சிந்தனையோ அல்லது ஒரு குழுவோ அல்ல. இது சமத்துவமானது. இந்த சமத்துவம் என்ற சொல் பிரெஞ்சு புரட்சிக்கு விதைத்த அரசியல் ரீதியிலான தாரக மந்திரமாகவே உருவானது.
டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பை எழுதும் போது ஈக்குவாலிட்டி என்பதை உள்ளார்ந்த, அறநெறி சார்ந்த விஷயமாகத் தான் உருவாக்கியிருக்கிறார்.
பார்வையாளர்களை படைப்பை வேடிக்கை பார்க்கும் வேடிக்கையாளர்களை போல் பார்க்காமல், அவர்கள் தங்களுக்குள் தங்களை பார்க்கும் வகையில் உருவாக்குவது தான் புதிய அலை.
மரபை மீறி புதிய அலையை உருவாக்குவது என்பது தமிழ் சூழலில் எப்போதோ நிகழ்ந்து இருக்க வேண்டும். ஏனெனில் வழக்கத்திற்கு மாறாக சிந்திக்க வேண்டும் என்ற சிந்தனையை விதைத்த பெரியார் இங்குதான் இருந்தார். அவருடைய நீட்சியாகத்தான் புதிய அலை திரைப்படங்கள் இருந்திருக்க வேண்டும். அதன் தாக்கம் பெரிதாக இல்லாமல் கொட்டிய குப்பையை மீண்டும் மீண்டும் கிளறுவது தான் தொடர்கிறது இதற்கு முன்னர் ஒரு சில முயற்சிகள் நடந்திருக்கின்றன, ஆனால் அவை முழுமையான வெற்றியைப் பெறவில்லை.
வெண்மணி படுகொலை பற்றி புதிய அலை சார்பில் எந்த ஒரு படைப்பும் இங்கு இல்லை. தமிழகத்தில் எவ்வளவோ சம்பவங்கள் இருக்கின்றன. 2009ம் ஆண்டில் மறைந்த பிரபாகரனை பற்றிய உள்ளார்ந்த படைப்பு என்று எதுவும் இங்கு இதுவரை இல்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கூட நாம் ஒரு செட் பிராப்பர்ட்டியாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
செழியனுக்கு பாராட்டுவது பிடிக்காது இருந்தாலும் செழியன் செழியன் தான். செழியனை செழியன் ஆகத்தான் பார்ப்போம்,” என்றார்.
எழுத்தாளர் தமிழ் பிரபா பேசுகையில், ”செழியன் உடைய மாணவராகத் தான் நான் இங்கு பேசுகிறேன். உலக சினிமாவைப் பற்றிய வித்தியாசமான பார்வையை அவர்தான் எனக்கு காண்பித்தார். சினிமா படைப்பாளிகளுக்கு இலக்கிய பின்புலம் வலிமையாக இருந்தால் அவர்களிடம் இருந்து செழுமையான படைப்பு வெளிப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். அவர் இலக்கியம், ஓவியம், இசை என அனைத்தும் அறிந்தவர். இதன் கலவையாகத் தான் அவர் ஒவ்வொரு காட்சியையும் வடிவமைக்கிறார் என நான் நினைக்கிறேன். அவரிடமிருந்து மாணவர்கள் தயாராகி வெளியாகும் போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றம்- இயக்கமாக தொடரும் என்பதாக பார்க்கிறேன்.
கமர்ஷியல் சினிமா, ஆர்ட் சினிமா என நாம் பிரித்துப் பார்த்தாலும் கேரளாவில் கலை இலக்கியம் சார்ந்த சினிமாவை தொடர்ந்து வளர்த்தெடுத்து வருகிறார்கள் என எனக்குத் தோன்றுகிறது. ஆனால் தமிழில் இது மெல்ல மெல்ல அழிந்து வருவதாக கருதுகிறேன். ஒரு தூய்மையான கலை வடிவத்திற்குள் ஒரு படைப்பு தமிழில் உருவாகவில்லையோ, என நினைக்கிறேன். இந்த இடைவெளியை செழியனின் தி ஃபிலிம் ஸ்கூல் மாணவர்கள் நிரப்புவார்கள் என நம்புகிறேன்,” என்றார்.
இயக்குநர் ஞான ராஜசேகரன் பேசுகையில், ”இன்று தமிழ் சினிமாவில் ஒரு படம் ஒரே நேரத்தில் 2000 திரையரங்குகளில் வெளியாகிறது. இது ஒரு தவறான முன்மாதிரி என நான் நினைக்கிறேன். இதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் இங்கு இல்லை. இதற்காக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் புரட்சி ஏற்பட வேண்டும். சினிமா என்பது வணிகத்தனம் மட்டுமல்ல அதில் படைப்புத் திறனும் உள்ளது.
ஒவ்வொரு படைப்பாளிக்கும் தன்னுடைய படைப்பை மக்களிடத்தில் காட்சிப்படுத்தி, அவர்களிடமிருந்து வெற்றியோ தோல்வியோ பரிசாக கிடைப்பதில் ஒரு சவுகரியம் இருந்தது. இந்த நிலை தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக இருந்தது. அந்த நிலை இன்று திடீரென்று மாறிவிட்டது. தற்போது சிலர் மட்டுமே வெற்றி பெற்று பெரும்பாலானவர்கள் தோல்வியைத் தழுவும் ஒரு தொழிலாக மாற்றி விட்டார்கள். இதற்கு செழியன் தன்னால் ஆன மிக சிறிய சீர்திருத்த பணியை தொடங்கி இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்,” என்றார்.
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பேசுகையில், ”எழுத்து மூலமாக உலக சினிமாவை செழியன் அறிமுகப்படுத்தினார். அவர் தொடராக எழுதியதை வாசிக்கும் போதே எனக்குள் ஒரு உத்வேகம் எழும். நாமும் செய்து பார்க்கலாம் என்ற விதையை விதைக்க செய்தவர் செழியன். அவருடைய சினிமா பற்றிய ஞானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் பிலிம் ஸ்கூலை தொடங்கி இருக்கிறார்.
தொலைக்காட்சிகளில் நடைபெற்ற நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சி மூலம் தற்பொழுது மெயின் ஸ்ட்ரீமில் ஏராளமான இயக்குநர்கள் இருக்கிறார்கள். இவர்களைப் போல் செழியனின் ஸ்கூலில் இருந்து வரும் 34 படைப்பாளிகளில் பலரும் மெயின் ஸ்ட்ரீமில் தங்களுடைய முத்திரையை பதிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, சாதிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
செழியன் துணை முதல்வரை சந்திக்கும் போதும் அழைப்பிதழ் மட்டும் வழங்காமல், கோரிக்கையையும் இணைத்து கொடுத்திருக்கிறார். அவருடைய இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
மொழிபெயர்ப்பு எழுத்தாளர் வே. ஸ்ரீராம் பேசுகையில், ”தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று எல்லோரும் வீட்டில் உட்கார்ந்த படி உலக சினிமாவை பார்க்க முடியும். 1970களில் இதுபோன்ற வசதி கிடையாது. சினிமா சார்ந்த அமைப்புகளில் உறுப்பினராக இருந்தால் மட்டும் தான் அதிலும் சிலருக்கு மட்டும் தான் இது போன்ற உலக சினிமாவை பார்க்கும் வாய்ப்புக் கிட்டும். சென்னையில் உள்ள பிரான்ஸ் நாட்டின் தூதரகத்தில் பணியாற்றியதால் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரெஞ்சு திரைப்படத்தை திரையிட்டோம். அப்போது திரையிடப்படும் திரைப்படங்களைப் பற்றிய ஒரு முன் சுருக்கத்தை திரையிடலுக்கு முன்னர் வழங்குவோம். படம் நிறைவடைந்த பிறகு படத்தைப் பற்றிய விவாதம் நடைபெறும் என்று நான் எதிர்பார்த்தேன் ஆனால் அது நடைபெறவில்லை. அதிலும் குறிப்பாக தமிழில் இதைப் பற்றி பேசுவதற்கு ஆள் இல்லை. அதன் பிறகு சென்னை பிலிம் சொசைட்டி மூலமாக ‘மரபியல் மீறிய சினிமா’ என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டோம். அதில் இயக்குநர் ஹரிஹரன் இந்த புதிய அலை பற்றிய அருமையான முன்னுரையை எழுதி இருந்தார்.
புதிய அலை தொடர்பான படைப்புகள் ஐரோப்பாவில் மட்டும்தான் வெளியாகுமா, தமிழிலும் வெளியாக வேண்டும் என்று எண்ணத்தில் செழியன் எடுத்த முயற்சி தான் இது. அவருடைய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ”50 லட்சம் ரூபாயில் ‘டூ லெட்’ எனும் திரைப்படத்தை உருவாக்கி, அதனை அனைத்து சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட்டு, விருதுகளை வாங்கி, இன்று வரை தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க்காக திகழும் படத்தை உருவாக்கியவர் செழியன். அதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரைப் பற்றி பல தருணங்களில் பெருமிதமாக குறிப்பிட்டிருக்கிறேன்.
அவர் எடுக்கும் இந்த முயற்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விழா பல தயாரிப்பாளர்களின் முன்னிலையில் நடைபெற வேண்டிய விழா.
இது தொடர்பாக நானும் சென்னையில் மத்திய அரசு ஆதரவுடன் மிகப்பெரிய விழா ஒன்றினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். அதற்கான முன்னோட்டமாக இந்த நிகழ்வை நான் காண்கிறேன்.
இங்கு அறிமுகமாகும் 34 இயக்குநர்கள், 30 லட்சத்தில் படமெடுக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதில் 10 பேர் வெற்றி பெற்றாலும் செழியனின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றியை அடையும்,” என்றார்.
இயக்குநர் ஹரிஹரன் பேசுகையில், ”ஈரானிய இயக்குநர் மக்மல்பாஃப்பை சந்தித்த பிறகு என்னுடைய மாணவர்களுக்கும் அவர் போதித்த சினிமா பற்றிய விஷயங்களை அறிமுகம் செய்தேன்.
இங்கு அறிமுகமாகும் 34 இயக்குநர்களும் எப்போதும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைவரும் பிரிந்து சென்றால் நீங்கள் கற்றது பயனற்றதாகிவிடும். எப்போதும் உங்களுடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் புரட்சி உருவாகும். புதிய அலை உருவாகும்,” என்றார்.
ரவிவர்மன் பேசுகையில், ”எனக்கு செழியன் உலக திரைப்படங்களை பற்றி எழுதிய எழுத்தாளராகத்தான் அறிமுகமானார். செழியனின் விரிவுரை வாசித்த பிறகு பல திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். செழியனை எப்போதும் ஒரு வரையறைக்குள் அடக்க முடியாது. பல பேருடைய லட்சியங்களை சில லட்சத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார். அது மிகப்பெரிய முயற்சி. இதற்காக நான் அவரை மனதார பாராட்டுகிறேன். 34 திரைப்படங்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல அரிய நிகழ்வு.
சீனாவில் தற்போது இரண்டு நிமிடம், மூன்று நிமிடம் கொண்ட மினி சீரிஸ் அறிமுகம் ஆகி இருக்கிறது. தற்போது நாம் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் நீடிக்கக்கூடிய படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் இது போன்ற படங்கள் உருவாகாது. தற்போது வெளியாகும் படங்களில் பாடல்கள் இடம் பெறுவதில்லை. அவை தனி ஆல்பமாக வெளியாகும் .அதன் பிறகு அதற்கென்று தனி ஒரு இசை வங்கி உருவாகும்.
இறவா வரம் பெற்ற படைப்பாளிகளை உருவாக்கிய செழியன் வாழிய வாழிய,” என்றார்.
படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் பேசுகையில், ”சுயாதீன படைப்பாளிகளுக்கு நேர்மை மிகவும் அவசியம். அதுவும் படைப்பை இன்றைய கால கட்டத்திற்காக உருவாக்காமல் எதிர்காலத்திற்காக உருவாக்குங்கள், 34 இயக்குநர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்,” என்றார்.
திரு. ட்ராட்ஸ்கி மருது பேசுகையில், ”செழியனை எனக்கு முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும். மிக தெளிவாக பணியாற்றக்கூடிய தொழில்நுட்பக் கலைஞர் அவர். அவருடைய அந்தத் தெளிவு திரைத்துறையில் ஒரு புதிய அலை தொடர்பான இயக்கமாக உருவாகி இருக்கிறது. இது ஒரு ஆரம்பம் என்று தான் நான் நினைக்கிறேன். கடந்த 40, 50 ஆண்டுகளில் இது போன்றதொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதில்லை. தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் ஓவியத்தை போல கவிதையைப் போல ஒரு திரைப்படத்தையும் எளிதாக உருவாக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
சக கலைஞர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான காலகட்டமாக இது இருக்கிறது. இதனை செழியன் முன்னெடுத்திருப்பதை நான் மிக முக்கியமானதாக பார்க்கிறேன். 34 திரைப்படங்களையும் சாத்தியப்படுத்தி இருக்கின்ற தி ஃபிலிம் ஸ்கூலில் படித்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு துணைபுரிந்தவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
எடிட்டர் பி.லெனின் பேசுகையில், ”அடிதடி இருப்பது மாற்று சினிமா. நாம் உருவாக்குவது ஒரிஜினல் சினிமா. ஏழு ஸ்வரம் தெரிந்து இருந்தால் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று பேசி விடலாம். அதற்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. இந்தி தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. தமிழ் தெரிந்தால் மட்டும் கூட போதும்.
இங்கு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட தி ஃபிலிம் ஸ்கூல் மாணவப் படைப்பாளிகளின் சுய விவர பட்டியலில் படைப்பிற்கான பட்ஜெட் 50 லட்சம் தான் அதிகபட்சமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் படப்பிடிப்பு நாட்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்போது நாங்கள் அதனை தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அதனை பார்க்கும் போது நாட்கள் தெரியவில்லை. முழு நீள திரைப்படத்தையும் சொன்ன நாட்களுக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்து வழங்கி இருக்கிறார்கள்.
நான் திரைத்துறையில் பணியாற்றத் தொடங்கி இது 61 வது ஆண்டு. இன்றும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஸ்கிரிப்ட் தான் முக்கியமானது. ஸ்கிரீன் பிளேயும் முக்கியம். எனவே இளம் இயக்குநர்கள் அனைவரும் பிரசண்ட்டில் பிளசன்ட்டாக பிரசண்டபிளாக இருங்கள். வாழ்த்துக்கள்,” என்றார்.
இந்நிகழ்வில் 34 சுயாதீன திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்களின் விவரங்கள்- அவர்கள் உருவாக்கும் திரைப்படங்களின் கதைச் சுருக்கம், பட்ஜெட், படப்பிடிப்பு தொடர்பான திட்டமிடல் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விழா மலரை ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீ ராம் வெளியிட, திரு. டிராட்ஸ்கி மருது பெற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து தி ஃபிலிம் ஸ்கூல் சார்பில் குறும்படம் மற்றும் ஆவண படங்களுக்கான போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீகர் பிரசாத், இயக்குநர் ஞான ராஜசேகரன், ஹரிஹரன், தனஞ்செயன் ஆகியோர் விருதை வழங்கி கௌரவித்தனர்.
இதைத்தொடர்ந்து 34 படைப்புகளும் திரையிடப்பட்டன. அவை அனைத்தையும் திரையுலக பிரபலங்கள் பார்வையிட்டு இளம் படைப்பாளிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
34 படைப்பாளிகளின் பெயர்களும் அவர்களின் படைப்புகள் பற்றிய விவரங்களும் வருமாறு:
1. அமல்.– தீவிரவாதி
2. சந்துரு – கூடு
3. விஜய் சுப்ரமணியன் – ஜஸ்ட் லிசன்
4. வினி லீட்டஸ் – சுழற்சி
5. குமரவேல் – நேற்றைய நிலா
6. சசிகுமார் திருமூர்த்தி – சேவ் தி கேட்
7. லெனின் சீதாராமன் – மோகன மதில்
8. அனுதீபன்.– கடைசி எல்லை
9. பாலா சீதாராமன் – பசி
10. மு. கார்த்திக் – மயில
11. ஹரிஹரன் ராக்கி – ஓட்டம்
12. **பொன் பொவனசுவரன் – கைபேசி
13. மைக்கேல் – கனி
14. மகேஷ் முருகேசன் – மியாவ்
15. பின்சி – மடந்தை
16. வீரா – விதி
17. சந்தோஷ் – தம்மம் பழகு
18. பாலு முருகேசன் – தாழ்
19. செந்தூ – உறுதுணை
20. நவீன் சீதாராமன் – குடை வள்ளல்
21. வெற்றிசெல்வன் – கிடை
22. விக்னேஷ் – லகடு
23. கோட்டை ராஜ் – இசக்கி
24. செந்தில் – அடவி
25. எர்னஸ்டோ – தணல்
26. வினோத் – வழித்துணை
27. ஆதம் – கண்ணாயிரம்
28. யுத்வின் சுபாஷ் – மத்தி
29. ஹபீப் – வார் கிட்ஸ்
30. கிருஷ்ணமூர்த்தி – அருகன்
31. சேகர் – ரைடர்
32. அகில் ரஹ்மான் – மௌனி
33. திலக் – மீனாட்சிபுரம்
34. மகேஷ் மிஷ்ரா – நிசப்தம்
தி ஃபிலிம் ஸ்கூல் குறித்த மேலும் விவரங்களை https://thefilmschool.in/ எனும் இணையதளத்தை பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம்.