பி சி ஸ்ரீராம், ரவிவர்மன், பி லெனின், ஶ்ரீகர் பிரசாத், எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியின் தலைவர் டிராட்ஸ்கி மருது உள்ளிட்ட திரையுலக முன்னணியினர் முன்னிலையில் சென்னையில் ஜனவரி 24 அன்று தொடக்க விழா நடைபெறுகிறது
முன்னணி ஒளிப்பதிவாளரும் உலக சினிமாவை தமிழில் அறிமுகப்படுத்தி ஆவணப்படுத்தியவருமான செழியன், ‘கல்லூரி’ ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பரதேசி’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக முத்திரை பதித்ததோடு மட்டுமில்லாமல் ‘டூ லெட்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் பாராட்டுகளை குவித்தார்.
எளிமையான கதையை திறமையாக படமாக்கும் அவரது நேர்த்தியை கண்டு வியந்த பலர், திரைப்படம் உருவாக்கும் உத்திகளையும் வித்தைகளையும் ஆர்வமுள்ளவர்களுக்கு அவர் கற்றுத் தர வேண்டும் என்று கோரியதன் விளைவாக ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ என்ற பள்ளியை செழியன் தொடங்கினார்.
மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், வெளிநாட்டவர் என பலரும் இப்பள்ளியில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் எண்பது பேரை தேர்ந்தெடுத்து கதை, திரைக்கதை உருவாக்கம், ஒளிப்பதிவு நுணுக்கங்கள், படத்தொகுப்பு என திரைப்பட உருவாக்கத்தின் அனைத்து துறைகளிலும் செழியன் அவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
‘தி ஃபிலிம் ஸ்கூல்’ பள்ளியில் கற்றுத் தேர்ந்த மாணவர்கள் திரைப்படங்களை உருவாக்க தற்போது தயாராகிவிட்டனர். இவர்கள் இயக்கவுள்ள.34 திரைப்படங்கள் திரையுலக முன்னணியினர் முன்னிலையில் ஒரே நாளில் சென்னையில் ஜனவரி 24 அன்று நடைபெறும் விழாவில் தொடங்கப்பட உள்ளன.
ஒளிப்பதிவாளர்கள் பி சி ஸ்ரீராம், ரவிவர்மன்; படத்தொகுப்பாளர்கள் பி லெனின், ஶ்ரீகர் பிரசாத்; இயக்குநர்கள் கே ஹரிஹரன், பிரசன்னா விதானகே; மற்றும் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியின் தலைவர் டிராட்ஸ்கி மருது உள்ளிட்ட பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த செழியன், “தி ஃபிலிம் ஸ்கூல் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் முழுநீள திரைப்படங்களை இயக்கும் அளவிற்கு தயாராகி இருப்பது பெருமைமிகு தருணம். ஒரே சமயத்தில் 34 திரைப்படங்கள் தொடங்கப்படுவது என்பது எளிதான விஷயமல்ல. இதைக் கேள்விப்பட்ட திரையுலக முன்னணியினர் எங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு எனது அழைப்பை ஏற்று தொடக்க விழாவில் கலந்து கொள்ள சம்மதித்து உள்ளனர். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி,” என்று கூறினார்.
தி ஃபிலிம் ஸ்கூல் குறித்த மேலும் விவரங்களை https://thefilmschool.in/ எனும் இணையதளத்தை பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம்.