Beyond Pictures தயாரிப்பாளர் ஜெய்வர்தா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜனரஞ்சகமான படைப்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ் திரைப்படத் துறையில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். பல்வேறு திட்டங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளன; அவற்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இதற்கிடையில், சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும், மரியா இளஞ்செழியன் இயக்கும் “ப்ரொடக்ஷன் நம்பர் 1” படத்தை அறிமுகப்படுத்தினர். இப்போது அந்த படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக “ஹேப்பி ராஜ்” என அறிவித்துள்ளனர்.
இயக்குனர் மரியா இளஞ்செழியன் தலைப்பின் பின்னணி குறித்து கூறும்போது,
“ஹேப்பி ராஜ்” என்ற தலைப்பு ஒரு எளிய ஆனால் ஆழமான சிந்தனையில் இருந்து உருவானது — சினிமாவை மகிழ்ச்சியின் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம். ஆக்ஷன் நிறைந்த மாஸ் என்டர்டெயினர்களுக்கு ரசிகர்கள் உற்சாகமாகக் குரல் கொடுப்பதை நாம் தினந்தோறும் காண்கிறோம். ஆனால், சமூக வலைதளங்களில் உலாவும் வடிகட்டப்படாத எதிர்மறை உணர்வுகளால், நம் இயல்பு வாழ்க்கையில் அதிகரித்து வரும் மனக்குழப்பங்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட இன்றைய உலகில், அந்த இருளைப் போக்கி வெளிச்சத்தைத் தருவதற்கான ஒரு சினிமா தேவையென நான் உணர்ந்தேன்.
என் நாயகனுக்கு ‘ஹேப்பி’ என்று பெயர் வைக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. அந்த பெயர் கதையின் மைய உணர்வை எப்போதும் நினைவூட்டும் ஒரு குறியீடு ஆகும். முழுக் கதையிலும் ‘ஹேப்பி’ என்ற வார்த்தை நூற்றுக்கும் மேற்பட்ட முறை ஒலிக்கும்; அது வெறும் சொல் அல்ல, நம்பிக்கையூட்டும் ஒரு தாள லயம் சேர்ந்த மந்திரம் போன்றது.
இந்தக் கதை அடிப்படையில் தூய மற்றும் உண்மையான மகிழ்ச்சியை மையக் கருவாகக் கொண்டது; அதே சமயம் வாழ்க்கையின் பல்வேறு உணர்வுகளையும் தொடுகிறது. “ஹேப்பி ராஜ்” படம் மகிழ்ச்சியான மற்றும் ஊக்கமளிக்கும் ஒரு அனுபவமாக அமையும்; மனதை நிம்மதியாக்கும். கோபம், புன்னகை, மகிழ்ச்சி அனைத்தும் நம் கையில் தான் உள்ளது என்பதை உணர்த்தும். வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடுபவர்களுக்கான ஒரு படைப்பு. திரையரங்கில் வரும் காட்சிகள் அனைத்தையும், நமக் கானது, நம் வாழ்க்கைக்கானது என்ற உள்ளார்ந்த ஒளியை பார்வையாளர்களுக்குக் கடத்தும் ஒரு சினிமா இது.” என தெரிவித்தார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீ கவுரி பிரியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வருகிறார் அழகிய நடிகர் அப்பாஸ். மேலும் ஜார்ஜ் மரியம், ப்ரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை மரியா இளஞ்செழியன் எழுதி இயக்குகிறார்; ஜெய்காந்த் சுரேஷ் இணைத் தயாரிப்பாளராக உள்ளார். மதன் கிரிஸ்டோபர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஆர்.கே. செல்வா எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்; குமார் கங்கப்பா கலை இயக்கத்தைப் பார்கிறார். உடை வடிவமைப்பைப் பிரவீன் ராஜா கவனிக்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ரேகா மேற்கொள்கிறார்.