சக்தி பீடம் ப்ரொடக்‌ஷன்ஸ் & Face Guru Institute of Legends movie media தயாரிப்பில் பி.சந்திரகுமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் “புத்தம் புது நேரம்”

சக்தி பீடம் ப்ரொடக்‌ஷன்ஸ் & Face Guru Institute of Legends movie media தயாரிப்பில் பி.சந்திரகுமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் “புத்தம் புது நேரம்”. கே.பரஞ்சோதி இசையமைக்க, முரளி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவசாயிகளின் நலன் பற்றி இந்த படம் பேசுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கான்கிரீட் ஜங்கிளாக மாற்றுவதை எதிர்க்கும் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வினில் இயக்குனர் சந்திரகுமார் பேசும்போது, “35 வருடங்களாக சென்னையில் தான் வசிக்கிறேன். பிளாக் & ஒயிட் சினிமாவில் இருந்து கலர், தற்போது டிஜிட்டல் சினிமா வரை வந்து நிற்பது மகிழ்ச்சி. கோவிட் பெருந்தொற்று காலத்தில் கிளப் ஹவுஸில் பேசும்போது சினிமா பற்றி நிறைய பேசினோம்.  ஆன்லைனில் பலருக்கு இலவசமாக சினிமா பற்றி கிளாஸ் எடுத்தேன். அப்போது எங்களுக்கு ஒர்க் ஷாப் வைத்தால் நன்றாக இருக்கும் என சொன்னார்கள். ஆனால் ஒர்க் ஷாப் நடத்துவதை விட 15, 20 நாட்களில் ஒரு சினிமாவாக எடுப்போம் என பேசினோம். அப்படி ஒரு படத்தையும் எடுத்தோம், ஆனால் அதை திரையரங்கில் ரிலீஸ் செய்யவில்லை. அதனால் தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஒரு படம் எடுக்க வேண்டும் என உருவாக்கப்பட்ட படம் தான் இந்த புத்தம் புது நேரம். இந்த படத்தில் தயாரிப்பாளர்கள் என யாரும் இல்லை, எல்லோரும் முடிந்த அளவு பணத்தை போட்டு எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்து எடுத்திருக்கிறோம். இந்த படத்தின் மூலம் லட்சங்கள், கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. இந்த படத்துக்கு உங்கள் ஆதரவை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் கே.பரஞ்சோதி பேசும்போது, “பாலக்காடு அருகில் உள்ள கொல்லங்கோட்டில் சந்திரகுமார் சார் குடும்பத்துடன் எங்களுக்கு நல்ல பழக்கம். அங்குள்ள கோவிலில் நான் பாடுவதை சார் கேட்டிருக்கிறார். அப்போதே என்னை நன்றாக வருவார் என சொன்னார். இசைஞானி இளையராஜா சார் என் மானசீக குரு. அவர் சொன்ன விஷயங்களை நான் இசையமைக்கும்போது இன்றும் பின்பற்றுகிறேன். சந்திரகுமார் சார் நன்றாக ட்யூன்ஸ் கேட்டு வாங்குவார். 1988ல் அவர் படத்துக்கு இசையமைத்தபோது என் இசையை கேட்டு விட்டு படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணகுமார் துபாயில் இருந்து எனக்கு ஒரு கீபோர்ட் வாங்கி அன்பளிப்பாக தந்தார். இப்போது என்னுடைய 70வது வயதில் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறேன். என் பிறந்த நாளன்று இந்த இசை வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார் இயக்குனர் சந்திரகுமார் சார். அவருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி” என்றார்.

படத்தொகுப்பாளர் கே.ராஜகோபால் பேசும்போது, “புத்தம் புது நேரம் படத்துக்கு முன்பு சந்திரகுமார் சாருடன் பணியாற்றியிருக்கிறேன். அவர் எங்களுக்கெல்லாம் குருவாக இருக்கிறார். படம் பெரிய வெற்றி அடைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

ஸ்கிரிப்ட் ரைட்டர் மற்றும் இணை இயக்குனர் டோனி தாமஸ் பேசும்போது, “சந்திரகுமார் சாரை நான் சந்தித்து 2 வருடம் ஆகிறது. புத்தம் புது நேரம் படத்தை கடுமையாக உழைத்து உருவாக்கியிருக்கிறோம். ரசிகர்களின் ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறோம்” என்றார்.

பாடலாசிரியர் கொங்கு கவி பாலு பேசும்போது, “என் பெயர் பாலசுப்ரமணியம். இந்த படத்தின் தலைப்பு பாடல் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது தான் என்முடய முதல் சினிமா பாடல். இதற்கு முன்பு நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன், 4 புத்தகங்களும் எழுதியிருக்கிறேன்” என்றார்.

நாயகி சுபஸ்ரீ பேசும்போது, “இது என்னுடைய இரண்டாவது படம். முதல் படமும் சந்திரகுமார் சாரின் படம் தான். அவர் என்னுடைய சினிமா வாழ்க்கையின் காட்ஃபாதர். இந்த புத்தம் புது நேரம் படம் வெற்றி பெற வேண்டும், ரசிகர்கள் ஆதரவு தேவை” என்றார்.

நாயகன் பரத்வாஜ் பேசும்போது, “சந்திரகுமார் சார் எங்கள் எல்லாருக்கும் அப்பா போன்றவர். எங்களது ஷூட்டிங் சினிமா செட் போலவே இருக்காது, குடும்பத்தினர் ஒன்றாக சுற்றுலா சென்றது போல தான் இருக்கும். விவசாயிகளின் முக்கியத்துவத்தை பற்றி இந்தப் படம் பேசுகிறது. என்னை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி” என்றார்.

நாயகன் சதீஷ்குமார் பேசும்போது, “சந்திரகுமார் சாருடன் என்னுடைய இரண்டாவது படம். சார் எல்லோருக்கும் தந்தை போன்றவர். ஆனாலும் அவர் என்னிடம் ஒரு நண்பன் போல தோளில் கைபோட்டு பழகுவார். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி” என்றார்.

நடிகர் ராஜ்குமார் பேசும்போது, “அடிப்படையில் நான் ஒரு வழக்கறிஞர். இந்த படத்தில் நடிக்கும்போது இது ஒரு குடும்ப கெட் டுகெதர் போலவே இருந்தது. எல்லோரும் ஒற்றுமையாக இந்த படத்தில் பணிபுரிந்தோம். உங்கள் அனைவரது ஆதரவும் எங்களுக்கு தேவை” என்றார்.

நடிகர் செந்தில் பேசும்போது, “புத்தம் புது நேரம் ஒரு படம் எனபதை விட குடும்பம் என்று தான் சொல்லணும். இந்த படத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை எடுத்து செய்தோம். இந்த குடும்பம் 2026-ல் ஐந்து திரைப்படங்களை எடுக்கப் போகிறோம் என்பதை சக்தி பீடம் சார்பில் பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை ரசியா பேசும்போது, “என் வாழ்க்கையில் இப்படி ஒரு மனிதரை சந்தித்ததில்லை. ஒரு அப்பாவாக, குருவாக, வழிகாட்டியாக இருந்துள்ளார். நான் மாலத்தீவில் இருந்து நடிக்க வந்திருக்கிறேன். இந்த அளவுக்கு நான் நடிக்க காரணம் சார் தான். இந்த குழுவுடன் இன்னும் பல படங்களில் பணிபுரிய ஆசை” என்றார்.

பாடகி மாதங்கி அஜித்குமார் பேசும்போது, ” இந்த படத்தில் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே பெருமை. நான் இதுவரை 25 பாடல்களை பாடியிருக்கிறேன். கே.ஜே.யேசுதாஸ், மது பாலகிருஷ்ணன் போன்ற லெஜண்ட்ஸ் உடன் பாடியிருக்கிறேன். இந்த படத்தில் வத்தலகுண்டு, கன்னி மாங்கா என இரண்டு பாடல்களை பாடியிருக்கிறேன். வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் பரஞ்சோதி சாருக்கும், இயக்குனர் சந்திரகுமார் சாருக்கும் நன்றி” என்றார்.

Comments (0)
Add Comment