அமிட்டி யுனிவர்சிட்டி மும்பை பன்வெல் வளாகத்தில் நடந்த திரைப்பட விழாவின் நிறைவுவிழா நிகழ்ச்சியில், மாணவர்களுடனான கேள்வி–பதில் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய திரைப்படத் துறையின் புகழ்பெற்ற எடிட்டரான ருபன், முழுக்க முழுக்க தன் திரையுலக அனுபவங்களை கலகலப்பாகப் பகிர்ந்து கொண்டார். எடிட்டிங்கில் தன்னுடைய இயல்பான வெட்டுகளாலும், தாள-லயத்தோடு கதை சொல்லும் உத்தியாலும் பெயர் பெற்ற ருபனின் இந்த உரை மாணவர்களுக்கு ஊக்கதையும் ஆர்வத்தையும் உண்டாக்கியது.
“நேர்மையாகச் சொன்னால், இது ஒரு விபத்தே,” என்று தன் ஆரம்ப கால நாட்களை நினைவுகூர்ந்தார் ருபன். “நான் பெரிய புத்திசாலி மாணவன் இல்லை. சோம்பேறியாக இருந்தேன்; தேர்வுக்கு முன் நண்பர்கள் சொல்வதையே நம்பியிருந்தேன்,” என்று சிரித்துக்கொண்டு கூறினார். “ஆனால் எனக்கு கவனிக்கும் திறன் அதிகம்; அதுதான் எனக்கு உதவியது.”
இசைக் குடுபத்தில் பிறந்தவர் தான் ருபன் — அவரது தந்தை ஒரு சாக்ஸஃபோன் கலைஞர். எனவே தாள-லய உணர்வு அவருக்கு இயற்கையாகவே இருந்தது. கல்லூரியில் இயக்குநராக வேண்டும் என்ற கனவில் இருந்தாலும், விதி அவருக்கு வேறு பாதையை காட்டியது.
“இரண்டாம் ஆண்டில், கௌதம் வசுதேவ் மேனன் இயக்கிய வெட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இன்டர்ன்ஷிப் கிடைத்தது,” என்று நினைவுகூர்ந்தார். “அப்போது பலருடன் பழகி, எனக்கு எடிட்டிங் மீது ஆர்வம் இருப்பதாகச் சொன்னேன். அந்தச் சிறிய உரையாடலே எனது வாழ்க்கையை மாற்றியது;
அதன் பிறகு எடிட்டர் ஆண்டனி அவர்களிடம் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என் வழிகாட்டியாக ஆனார்.”
இயக்குநர் ஷங்கரின் ஒரு கருத்து தன்னை ஆழமாகப் பாதித்ததாகவும் ருபன் கூறினார்.
“ஷங்கர் சார் ஒருமுறை கூறியதைப் படித்தேன் – ஒரு சிறந்த இயக்குநராக வேண்டுமானால், முதலில் எடிட்டிங் அறையில் அதிக நேரம் செலவிட வேண்டும். அங்கேதான் கதை சொல்லலுக்கான உண்மையான சாரம்சத்தை புரிந்து கொள்ள முடியும். அதைத்தான் என் மனதில் பதித்துக் கொண்டேன். பத்து திரைப்படங்களை எடிட்டிங் செய்து அனுபவம் சேர்த்து, பிறகு இயக்குனாராகி விடலாம் என்று முடிவு செய்தேன்.”
“ஆனால் சில ஹிட் படங்களுக்குப் பிறகு, எடிட்டிங் மீதான என் காதல் அதை விட ஆழமானது என்பதை உணர்ந்தேன்,” என்று சிரித்தபடி கூறினார். “இப்போது என் 85வது படத்தில் வேலை செய்கிறேன். ஆனாலும் இயக்குநராகும் கனவு இன்னும் உயிரோடு இருக்கிறது. சரியான கதை மற்றும் சரியான நேரத்திற்காக காத்திருக்கிறேன்.”
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் எடிட்டிங் துறையில் நிகழும் மாற்றங்களை நோக்கி கேள்விகள் சென்றபோது, ருபன் மாணவர்களிடம் ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்தார் — “AI ஒரு உதவியாளர்; எதிரி அல்ல. அது உதவலாம், ஆனால் கதை சொல்லும் கலை மனிதனுடையது.” என்றார். அவரது இந்த வார்த்தை மாணவர்களிடையே பெரிய கரகோஷத்தை எழுப்பியது.
கலகலப்பாகவும் கரகோசத்துடனும் முடிந்த இந்த நிகழ்வின் மூலம் மாணவர்களுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது: அதாவது “எடிட்டிங் என்பது ஒரு படத்தின் தாள-லயம், தனது உள்ளுணர்வு, மற்றும் சரியான நேரம்” ஆகியவற்றை பொறுத்தது.