சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய கசிவு என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது.
தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்க விஜயலட்சுமி, ஹலோ கந்தசாமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் வரதன் செண்பகவல்லி இயக்கியுள்ளார். வெற்றிச்செல்வன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ள இந்த படம் அக்-23 இரவு முதல் ஓடிடி பிளஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இதனையடுத்து இந்த படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (அக்-23) மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் பூமணி, இயக்குனர்கள் சுப்பிரமணிய சிவா, அஜயன் பாலா, கேபிள் சங்கர் மற்றும் ராப் பாடகர் அறிவு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாக கசிவு திரைப்படம் பத்திரிக்கையாளர்களுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது.
இந்த நிகழ்வில்
இயக்குனர் சுப்பிரமணிய சிவா பேசும் போது,
“1998 ல் ஐயா பூமணி அவர்கள் தனது கருவேலம் பூக்கள் நாவலை படமாக இயக்கிய சமயத்தில் அவரிடம் நான் உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்றினேன். எந்த அளவிற்கு அவர் நேர்மையானவர் என்றால் அந்தப் படத்தை தயாரிப்பதற்காக கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் மீதி இருந்த பணத்தை தயாரிப்பு நிறுவனத்திடமே திருப்பி ஒப்படைத்தவர். கரிசல் எழுத்துக்களை மக்கள் மொழியில் கதையாக சொல்லக்கூடிய எழுத்தாளர் பூமணி. ரத்தமும் சதையுமாக மக்கள் பிரச்சனைகளை பேசியவர். மாபெரும் ஆளுமை மிகுந்த எழுத்தாளர். எவ்வளவு சிறந்த மனிதனுக்கும் மோசமான பின் கதைகள் இருக்கும். சாகும் தறுவாயில் அது என்னவென்று சொல்லிவிட்டு உயிரை விடுபவர்களுக்கு அது ஒரு ஆத்ம திருப்தியாக இருக்கலாம். ஆனால் அது அவரை சார்ந்த மற்றவர்களுக்கு கஷ்டத்தை தான் தரும். அதனால் நம் உயிர் போகும் வரை அதை சொல்லாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். என்பதை இந்த கசிவு படத்தில் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்” என்று பேசினார்.
ராப் பாடகர் அறிவு பேசும்போது,
“இந்த கசிவு கதையை நான் படிக்கவில்லை. ஆனால் படம் பார்த்தபின் இந்த கதை நடக்கும் ஊருக்குள்ளேயே இருந்தது போல, தாத்தா பாட்டி உடன் வாழ்ந்தது போல நினைவுகளை ஏற்படுத்தியது. அவர்கள் வயதில் சில பிழைகளை செய்து அதை தாண்டித்தான் அந்த அனுபவத்தில் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்க ஆலோசனை தருகிறார்கள். இந்த படம், பார்ப்பவர்களிடம் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று பேசினார்.
டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனர் வேடியப்பன் பேசும்போது,
“இந்த படத்தின் இறுதி காட்சி மனதுக்கு கஷ்டம் தருவதாக, மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று சொல்வதை நிரூபிப்பது போல இருந்தது. பூமணி அய்யாவின் கருவேலம் பூக்கள் படத்தை ஒரு பார்வையாளராக பார்த்திருக்கிறேன். அவரது வெக்கை நாவலை படமாக்க முயற்சி எடுத்து அவருடன் பலமுறை பேசியிருகிறேன்.. ஆனால் அதை வெற்றிமாறன் படமாக எடுத்துவிட்டார்” என்று பேசினார்.
எழுத்தாளரும் இயக்குனருமான அஜயன் பாலா பேசும்போது,
எழுத்தாளர் பூமணி மிகப்பெரிய சாதனையாளர். ஒரு எழுத்தாளர் இயக்குனராக மாறி தனது படத்தை படமாக்க முயற்சிப்பது என்பது அரிது. 23 வருடங்களுக்கு முன்பே கருவேலம் பூக்கள் படம் மூலம் அதை அவர் சாதித்து இருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை, இலக்கியத்தில் அவர் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். கரிசல் எழுத்தாளர்களின் வரிசையில் அவரது பெயரும் எப்போதும் இருக்கும். இந்த படம் நமக்குள் உண்டாக்கும் தாக்கம், அதிர்வு தான் கசிவு என்று சொல்லலாம். இந்த படம் பார்த்ததும் நான் சிறுவயதில் செய்த தவறு என் நினைவுக்கு வந்தது. ஆழ்மனதில் உள்ள குற்ற உணர்ச்சி, அதை எம்.எஸ் பாஸ்கர் சிறப்பாக தனது பொன்னாண்டி கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். முதுகில் கூட நடிப்பை வெளிப்படுத்துபவர் என நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சொல்வார்கள். அவருக்கு அடுத்து அப்படிப்பட்ட ஒரு நடிகர் எம்.எஸ் பாஸ்கர் தான் இந்த கசிவு படத்தின் மூலம் அவருக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது” என்று பேசினார்.
இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது.
“மாதத்திற்கு குறைந்தது 40 படங்களாவது பல்வேறு காரணங்களுக்காக பார்க்கிறேன். வெகு சில படங்கள் தான் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவல் படித்த திருப்தி அது படமாக வெளியான போது கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. எல்லா மனிதர்களுக்கும் ஒரு கருப்பு பக்கம் இருக்கும். இந்த படத்தின் பொன்னாண்டி கதாபாத்திரம் போல் என்னுடைய தாத்தாவின் மனதிலும் சில விஷயங்கள் இருந்தன. கடைசி காலகட்டத்தில் உண்மை பேசி அதை வெளிப்படுத்தி மன நிறைவுடன் இறந்தார். இந்த கசிவு நாவல் ஒரு வெப் சீரிஸ் மாதிரியான முயற்சி தான். அதில் இது முதல் படம் என்று சொல்லலாம். எம்.எஸ் பாஸ்கர் நடித்தாலே அந்த படம் நன்றாக இருக்கும் என்பது போல ஒரு சூழல் தற்போது உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு இந்த கசிவு படத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இன்று (அக்-23) முதல் இது ஓடிடி பிளஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது” என்று பேசினார்.
ஓடிடி பிளஸ் சையத் பேசும்போது,
“கேபிள் சங்கர் ஒரு படத்தை பார்த்துவிட்டு முடிவு செய்தால் நிச்சயமாக அந்த படம் எங்கள் ஓடிடி பிளஸ் தளத்தில் வெளியாகும். ஆனால் வேறு சில ஓடிடி தளங்களில் வெளியாவதில் பல நடைமுறை சிரமங்கள் இருக்கின்றன. அவர்கள் கர்ஷியலாக நிறைய எதிர்பார்க்கிறார்கள். எம்.எஸ் பாஸ்கர் தேசிய விருது பெற்ற நடிகர் என்பதால் அவர்தான் இந்த படத்திற்கான வியாபார புள்ளியாக இருக்கிறார். அவரால் தான் இந்த படத்தை விற்க முடிந்தது. இன்னும் நிறைய படங்கள் இதுபோல வர வேண்டும்’ என்று கூறினார்.
தயாரிப்பாளர் வெற்றிச்செல்வன் பேசும்போது,
“நான் அமெரிக்கா போனதும் தான் தமிழ் மீது எனக்கு அதிக அக்கறை வந்தது. 100 பக்கம் கொண்ட ஒரு புத்தகம் உருவாவதற்கு பின்னணியில் ஆயிரம் பக்க உழைப்பு இருக்கிறது. அந்த அளவிற்கு ஒரு கதையை எழுதுவதற்கு முன்பாக நிறைய ஆய்வுகள் செய்து தான் எழுதுகிறார். அப்படி பின்னணி கதைகளை கூட புத்தகமாக வெளியிட்டும் இருக்கிறார். அவரது வெக்கை நாவல் அசுரன் படமானபோது பெரிய அளவில் அவருக்கு முழு திருப்தி இல்லை. அதனால் இந்த கசிவு நாவலை படமாக்கும்போது எதையும் மாற்றாமல் அவருடைய எழுத்து, வசனம் மட்டுமே இதில் வைத்திருக்கிறோம். கசிவு திரைப்படம் 16 முதல் 21 வயதுக்குள் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மையில் எனக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. ஆனால் பூமணி ஐயா மீது வைத்திருந்த மதிப்பில் தான் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் மாட்டு கொட்டகையில் கூட படுத்து தூங்கி இருக்கிறார்,. அதனால் தான் அவருக்கு தேசிய விருது தேடி வருகிறது” என்று பேசினார்.
நடிகர் எம்.எஸ் பாஸ்கர் பேசும்போது,
“கரிசல் எழுத்தாளர்கள் என்றால் கி.ராஜநாராயணன், பூமணி இவர்கள்தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். என்னிடம் பூமணியின் இந்த கசிவு நாவலில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் வரதன் சொன்னபோது, அதனாலேயே உடனே ஒப்புக்கொண்டேன். இந்த படப்பிடிப்பு நடைபெற்ற கிராமம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் கொஞ்சம் நேரம் கிடைத்தபோது மாட்டு கொட்டகையில் சிறிது நேரம் படுத்து தூங்கினேன்.
என்னைப் பொறுத்தவரை ஆதாயத்துக்காகவும் நடிக்கணும்.. ஆத்ம திருப்திக்காகவும் நடிக்கணும்.. கசிவு திரைப்படம் அப்படி ஆத்ம திருப்திக்காக நடித்த படம் தான். சொர்க்கம், நரகம் என்பது நாம் இறந்த பின்னால்தான் என்பது இல்லை. இங்கேயே இருக்கிறது. நாம் செய்த தப்பு கடைசி வரை உறுத்திக் கொண்டே இருக்கும். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட படம் பார்ப்பதால் எல்லோரும் திருந்தி விட முடியாது. காரணம் எவ்வளவோ சட்ட திட்டங்கள் வந்துவிட்டாலும் முன்பை விட இப்போது குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. எனக்கு இதுபோல நல்ல நல்ல கதாபாத்திரங்களாக தாருங்கள். என் நடிப்பை இன்னும் நான் மெருகேற்றிக் கொள்கிறேன். எழுத்தாளர் பூமணி ஐயாவின் எழுத்துக்களை பேசி நடித்ததே எனக்கு இன்னொரு தேசிய விருது கிடைத்தது போல தான்” என்று கூறினார்.
இயக்குநர் வரதன் பேசும்போது,
“கசிவு படத்தை நான் இயக்கினேன் என்று சொல்வதை விட கசிவு தான் என்னை இயக்கியது. எழுத்தாளர் பூமணி ஐயாவை சந்தித்தபோது என்னிடம் மூன்று சிறுகதைகளை கொடுத்தார். நானும் அவரை போலவே கரிசல்காரன் தான். அவர் கொடுத்த கதைகளை குறும்படங்களாக இயக்க வேண்டாம் ஆந்தாலஜி படமாக இயக்கலாம் என்று தான் முதலில் முடிவு செய்தோம். ஆனால் அது சரி வராததால் அந்த மூன்றில் இருந்து கசிவு நாவலை தேர்ந்தெடுத்து முதலில் படமாக இயக்கியிருக்கிறோம். நன்செய், புன்செய் என்பது போல பூமணி ஐயா எழுதிய நான்கு கதைகளை கருஞ்செய் கதைகள் என்கிற பெயரில் தொகுத்து அதில் இது முதல் படமாக வெளியாகி இருக்கிறது என்று சொல்லலாம்.
மலையாளத்தில் எம்டி வாசுதேவன் நாயர் கதைகள் மனோரதம் என்கிற பெயரில் மிகப்பெரிய பட்ஜெட்டில், பெரிய நட்சத்திரங்கள் நடித்து வெளியானது. இங்கே அதுபோன்ற சூழல் தற்போது இல்லை. பொன்னாண்டி கதாபாத்திரத்திற்கு நான் யோசித்து வைத்திருந்ததைப் போலவே பூமணி ஐயாவும் எம்.எஸ் பாஸ்கரை தான் நினைத்து வைத்திருந்தார். இந்த கசிவு படப்பிடிப்பு தளத்தில் பூமணி ஐயா ஒரு பிக்பாஸ் மாதிரி படப்பிடிப்பை மானிட்டர் பண்ணிக்கொண்டே இருந்தார். எம்.எஸ் பாஸ்கரின் ஒத்துழைப்பும் ஈடுபாடும் இருந்ததால் தான் இந்த படத்தை ஏழே நாளில் எடுத்து முடித்தோம்” என்று கூறினார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
தயாரிப்பு ; வெற்றிச்செல்வன்
கதை, வசனம் ; சாகித்ய அகாடாமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி
இயக்கம் ; வரதன் செண்பகவல்லி
இசை ; ஜெயா K தாஸ்
ஒளிப்பதிவு ; முருகன். G
படத்தொகுப்பு ; தமிழ்குமரன். M
பாடகர் ; கிருஷ்ணராஜ்
மக்கள் தொடர்பு ; KSK செல்வா