கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த 28 மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கையில் கடல் எல்லையைத் தாண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பஹ்ரைன் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய அரசாங்கம், தமிழக அரசாங்கம் மற்றும் இந்தியத் தூதரகம் எடுத்த முயற்சியால் தண்டனைக் காலம் 3 மாதமாகக் குறைக்கப்பட்டது. இவர்கள் சிறையில் இருந்த நாட்களில் அன்னை தமிழ் மன்றம் இவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்து வந்ததுடன், இவர்களது குடும்பத்தினருக்கு இந்த வழக்கு தொடர்பான தகவல்களை பஹ்ரைன் அரசாங்கத்திடமிருந்தும், இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களிடமிருந்தும் உடனுக்குடன் பெற்று தெரிவித்து வந்தது. அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் திரு. செந்தில் G.K. அவர்கள் கடந்த மாதம் இவர்களது ஊரான இடிந்தகரைக்கு நேரில் சென்று சூழ்நிலைகளை விளக்கியதோடு இவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி திரும்பினார். தற்போது இவர்கள் விடுதலை செய்யப்பட்டு இன்று 18-12-2024 புதன்கிழமை இரவு தாயகம் திரும்புகின்னறனர். இந்த வழக்கை விரைந்து முடித்து வைக்க உதவிபுரிந்த, இந்திய அரசு மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்கள், தமிழக அரசு, இந்தியத் தூதுவர் திரு வினோத் K ஜேக்கப் அவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், NRTIA பஹ்ரைன் பொறுப்பாளர்கள் மற்றும் இதர அமைப்பினர் அனைவருக்கும் அன்னை தமிழ் மன்றம் மனதார நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. இன்று பயணம் மேற்கொள்ளும் இந்த 28 மீனவர்களுக்குத் தேவையான பொருள்கள் மற்றும் இனிப்புகள், பஹ்ரைனில் உள்ள கத்தோலிக்க தமிழ் கிறிஸ்தவ சபை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களின் ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் பணஉதவி வழங்குவதில் அன்னை தமிழ் மன்றத்தோடு இணைந்து, பஹ்ரைன் தமிழ் கிறிஸ்தவ திருச்சபை, எகோமெனிக்கல் கான்பரன்ஸ் ஆப் சேரிட்டி ஆகியோர் உதவிக்கரம் நீட்டினர். இன்னும் சிறிதும் பெரிதுமாக உதவிகள் புரிந்த அனைவருக்கும் அன்னை தமிழ் மன்றம் தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.